×

அகராதி ஆய்வு மலருக்கு கட்டுரைகள் அனுப்பலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அகராதி ஆய்வு மலருக்கு கட்டுரைகள் அனுப்பி வைக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘தமிழ் அகராதியியலின் தந்தை’ என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை போற்றும் வகையில், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் மூலம் ஆண்டுதோறும் நவம்பர் 8ம் தேதி ‘தமிழ் அகராதியியல் நாளாக’ கொண்டாடப்படுவதோடு, பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-2024ம் ஆண்டிற்கான பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் 5 பக்க அளவில் ஆய்வு கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம். தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே ‘தமிழ் அகராதியியல் நாள்’ சிறப்பு ஆய்வு மலரில் இடம் பெறும்.

1. மின்னகராதி காலத்தின் தேவை, 2. கலைச்சொல்லாக்கமும் ஊடகத்துறையும், 3. சமுக வலைத்தளங்களில் கலைச்சொல் பயன்பாடு, 4. கலைச்சொல்லாக்கமும் மொழி வளர்ச்சியும், 5. கணினி தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும், 6. தமிழ் பத்தி இலக்கியங்களில் காணப்படும் கலைச்சொற்கள், 7. ஓலைச்சுவடிகளில் காணப்படும் அருந்தமிழ்ச்சொற்கள், 8. கலைச்சொல்லாக்கமும் திரைத்துறையும் 9. தமிழில் மொழி கலப்பை கலைதல், 10. வட்டார வழக்கில் சொல்லாக்கம் 11. தமிழ் அகராதியியலின் தோற்றமும் வளர்ச்சியும், 12. அகராதி வளர்ச்சியில் மேலைநாட்டினரின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம். agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், “இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, மே.ரா.செ. நகர், சென்னை – 600 028” என்ற இயக்கக முகவரிக்கும் செப். 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அகராதி ஆய்வு மலருக்கு கட்டுரைகள் அனுப்பலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Etymology ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்